Saturday, March 24, 2012

விநாயகர் அகவல்

நண்பர்களே விநாயகர் அகவலை படித்து பாருங்கள். ஔவையார் தன்னுடைய யோகா வல்லமையை இதில் கொடுதுருகிறார்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசைப் பாடப்
பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகுஎ றிப்பப்
பேழை வயிறும், பொரும்பாரக் கோடும் 05

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த தூய மெய்ஞ்ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன 15

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்துஎன் உளம்தனில் புகுந்து 20

குருவடிவு ஆகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில் 25

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்துஇருள் கடிந்து 30

தலமொரு நான்கும் தந்துஎனக்கு அருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்குச நிலையும் 35

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்து அறிவித்துக்
கடையிற் கழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முகம் ஆக இனிதெனக்கு அருளி 50

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதுஎனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து 55

முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிங்கு ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில் 60

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம்காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் 65

கணுமுற்றி நின்ற கரும்பு உள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடும்மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சு அக்கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத் 70

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே

1 comment:

sury siva said...

http://youtu.be/Iw2rM0CWITw

you can also listen to this akaval at
my blog
http://pureaanmeekam.blogspot.com
i am attempting to sing this akaval in a ragamalika pattern

Thanks a lot for motivating me to sing this prayer again

subbu rathinam.