Tuesday, July 29, 2014

வைணவம்

வைணவம்

ஓம் நமோ நாராயணாய

இது மதுரகவிஆழ்வார் என்னும் ஆழ்வாரினால் பாடப்பட்டது. அவர் தன் குருவான நம்மாழ்வாரை நினைத்து பாடினது. இவர் ஒரு ஆழ்வார் தான் திருமாலைப்பாடாமல் குருவை மட்டுமே பாடினவர்.

இதை 10000 தடவை சொன்னால் நம்மாழ்வார் நேரில் வருவதாக ஒரு நம்பிக்கை

மதுரகவிஆழ்வார் ஞானத்தை தேடி காசி வரை சென்றார். அங்கே ஒரு ஜொதி தெரிந்தது. அந்த ஜோதியை பின்பற்றி நடந்து சென்றார். அது அவரின் சொந்த ஊர் பக்கம் இருக்கும் ஆழ்வார்திருநகரி வரை வந்தது.
பின் ஒரு புளியமர பொந்தில் போய் மறந்தது. அந்த பொந்தில் நம்மாழ்வார் தவம் செய்து கொண்டு இருந்தார்

இதைப்பார்த்த மதுரகவி ஆழ்வார் , நம்மாழ்வாரை எழுப்ப சிறு சத்தம் எழுப்பினார். ஒரு கல்லை தூக்கி எறிந்தார் என்றும் சொல்லுவார்கள். நம்மாழ்வாரைப்பார்த்து

“செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்” என்று கேட்டார்

அதற்கு நம்மாழ்வார் “அத்தை தின்று அங்கே கிடக்கும்” என்று பதில் சொன்னார்.

அதற்கு அர்த்தம் என்னவென்றால் செத்ததாகிக இந்த அண்டத்தில் வயிற்றில் சிறியதாகி ஆன்மாக்கள் பிறந்தால் எதைத்தின்று எங்கே கிடக்கும் என்று அர்த்தம்.

பரம்பொருள் நாராயணனே என்று அறியாமல் இன்ப துன்பங்களை நுகர்ந்து பிறப்பு இறப்பில் அங்கேயெ கிடக்கும் என்று பதில் சொன்னார். அருமையான பதில்

நம்மாழ்வாரை பற்றி மதுரகவிஆழ்வார் எழுதின பாடல் இது

1. கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என் அப்பனில்
நண்ணித்தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே.

2.நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்றறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே.

3.திரிதந்தாகிலும் தேவபிரானுடை
கரியகோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண்குருகூர் நகர்நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே.

4.நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னையாண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே.

5.நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்
செம்பொன்மாடத் திருக்குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே.

6.இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன்புகழ் ஏத்த அருளினான்
குன்றமாடத் திருக்குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன் காண்மினே.

7.கண்டு கொண்டென்னை காரிமாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றியருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண்தமிழ் சடகோபன் அருளையே.

8.அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ்வுலகினல் மிக்கதே.

9.மிக்கவேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்கசீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆள்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே.

10.பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்
குயில் நின்றார்பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன்தன் மொய்கழற்கு அன்பையே.

11.அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெல்லாம்
அன்பன் தென்குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே.

2 comments:

Ravichandran M said...

மதுரகவி ஆழ்வாரின் பாடலுடன் பதிவினை அளித்திருப்பது பதிவு சிறப்புடன் பகிர்வதில் தங்களின் உழைப்புத் தெரிகின்றது. சிரத்தையுடன் பதிவிடுங்கள்! அருமை! அருமை! தொடர்ந்து பதிவிடுங்கள் அன்பரே!

நாமக்கல் சிபி said...

அருமை! சிறப்புடன் பகிர்வதில் தங்களின் உழைப்புத் தெரிகின்றது. தொடர்ந்து பகிருங்கள்!