Sunday, August 23, 2015

சிவராஜ யோக கதை

நெட்டில் சுட்ட கதை. எங்கே சுட்டேன் எனக்கு தெரியாது

சிகித்வஜன் என்பவனின் பட்டத்து ராணி சூடாலை.

உலக சுகங்களில் அதிகமாக ஈடுபாடு கொண்ட அவனுக்கு, இது உண்மையான சுகமில்லை. உண்மையான சுகத்தைத் தேடிப் பெற வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது.

அறிஞர்கள் பலரிடமும் அவன் விசாரித்தான். அவர்கள் அனைவரும் உண்மையான சுகம் ஆத்மஞானத்தில்தான் கிடைக்கும் என்றார்கள்.

அரசனும் அரசியும் ஆத்மஞானம் பெறுவது என முடிவு செய்தார்கள்.

ராணி சூடாலை மிகவும் புத்திசாலி. அவளுக்கு விரைவில் ஆத்மஞானம் கிடைத்தது. அவள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கலானாள். அவளுக்கு உலகம் இன்பமயமாகத் தோன்றத் தொடங்கியது.

சூடாலை அரசனுக்கு ஆத்மஞானம் பெறுவதி உதவ விரும்பியும் அதை அவன் ஏற்க மறுத்து விட்டான். அவனுக்குள், “ஒரு பெண்ணிடம் உபதேசம் பெறுவதா?” என்கிற எண்ணம் மேலோங்கியது.

அதன் பிறகு அவன் எவ்வளவு முயன்றும் ஆத்மஞானம் பெற முடியவில்லை. ஒருநாள் இரவு அவன் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினான்.

அந்தக் காலத்தில் சூடாலையே அரசனின் பணிகள் அனைத்தையும் கவனிக்கத் தொடங்கினாள். யோகப் பயிற்சி மூலம் பல திறன்களைப் பெற்றிருந்த அவள், அரசன் காட்டில் தனிமையில் உலவிக் கொண்டிருந்ததை அறிந்தாள்.

அவள் தனது சக்தியின் மூலம் தன்னை ஒரு இளைஞனாக மாற்றிக் கொண்டு காட்டிற்குள் சென்றாள். தனது பெயரை கும்பஜன் என்று மாற்றிக் கொண்டாள்.

சிகித்வஜனுக்கு கும்பஜனாக இருந்த சூடாலை ஆத்மஞானம் பெறுவதற்கான பல வழிகளைக் காட்டினாள்.

அவை அரசனுக்குப் பெரிதும் உதவின.அரசன், சிறிது சிறிதாக ஞான வழியில் முன்னேற்றமடைந்தான். முடிவில் அவனும் ஆத்மஞானம் பெற்று, மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கினான்.

சூடாலை அவனைச் சோதிப்பதற்காகத் தன்னை ஆணுருவத்திலிருந்து பெண்ணுருவத்துக்கு மாற்றிக் கொண்டு, மதனிகை என்ற பெயரோடு அவன் முன் தோன்றி, அவனை மணந்து கொண்டு அவனுடன் வாழத் தொடங்கினாள்.
ஒரு நாள் சூடாலை தன் யோகத் திறனினால் ஒரு இளைஞனைப் படைத்தாள். அன்று ஆற்றில் மாலை வழிபாடு முடித்துக் கொண்டு தன் இருப்பிடத்துக்குத் திரும்பிய அரசன், அங்கே மதனிகை ஒரு இளைஞனுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவனுக்குச் சிறிது கூட கோபம் வரவில்லை. மதனிகை அவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.

உடனே அவன், “இப்போது என்ன ஆகி விட்டது?, நாம் இப்போது நண்பர்களைப் போலத்தான் வாழ்கிறோமே தவிர, கணவன் - மனைவியைப் போலில்லை” என்று சொல்லித் தேற்றினான்.

அப்போது சூடாலை தன் உண்மையான உருவத்தில் அரசன் முன் தோன்றினாள். அவனுக்கு மகிழ்ச்சி உண்டானது.

இந்தக் கதையை வசிஷ்ட முனிவர், ஸ்ரீ ராமபிரானுக்குச் சொல்லி, “குழந்தையே நல்ல குலத்தில் தோன்றிய பெண்கள் தம் கணவரையும் சம்சார சாகரத்திலிருந்து கரையேற்றி விடுகிறார்கள்” என்றார்.

Sunday, August 9, 2015

ராமகிருஷ்ணரின் குட்டிக்கதைநெட்டில் சுட்ட கதை.
https://ramanans.wordpress.com/.../குருதேவர...

குருதேவர் சொன்ன குட்டிக் கதை

குருதேவர் ராமகிருஷ்ணர் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
“எல்லாம் நாராயணன்தான்; எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். நல்லவர்களிடமும் அவர் இருக்கிறார்; கெட்டவர்களிடமும் அவர் இருக்கிறார். இருந்தாலும் தீயவர்களிடமிருந்து நாம் சற்று விலகியே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்குத் துன்பம்தான் வரும்” என்று கூறியவர், அதை விளக்க கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தார்.ஒரு குருவினிடத்தில் சீடன் ஒருவன் இருந்தான். அந்தச் சீடரிடம் குரு “அனைத்தும் நாராயணன் தான், அதனை மறந்து விடாதே” என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். குருவின் வாக்கையே திருவாக்காக எடுத்துக் கொண்ட சீடன், அதனையே பின்பற்ற ஆரம்பித்தான். மண்புழுவிலிருந்து மனிதன் வரை அனைத்தையும் நாராயணனாகவே பார்க்க ஆரம்பித்தான்.

ஒரு முறை புதிய ஊர் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தான் அந்தச் சீடன். திடீரென மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓட ஆரம்பித்தனர். சீடனையும் ஓடி ஒளிந்து கொள்ள சொல்லினர்.

சீடன் என்ன காரணம் என்று கேட்டான்.

அதற்கு மக்கள், “யானைக்கு மதம் பிடித்து விட்டது. அது ஆவேசமாக வந்து கொண்டிருக்கிறது. ஓடிப்போய் உடனே உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்” என்று கூறினர்.

ஆனால் அந்தச் சீடனோ, “யானையிலும் நாராயணன்தான் இருக்கிறார். அவர் என்னைக் காப்பாற்றுவார் என்று கூறி விட்டு தன் பாட்டுக்குச் சென்று கொண்டிருந்தான்.

எதிரே பெரிய யானை ஒன்று வெறியோடு பிளிறிக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தது. அதனைத் துரத்திக்கொண்டு வந்த அதன் பாகன், சீடனை விலகிச் செல்லுமாறு பலமுறை கூக்குரலிட்டான்.

ஆனால் சீடனோ, ’நாராயணன் என்னைக் கைவிட மாட்டான்’ என்று கூறி ஒதுங்காமல் நேர் எதிராக அப்படியே நின்று கொண்டிருந்தான்.

எதிரில் வந்து கொண்டிருந்த யானை, தன் துதிக்கையால் சீடனைத் தூக்கியது. தூர வீசி எறிந்தது.

பலத்த காயங்களோடு சீடன் உயிர் பிழைத்தான்.

உடல் நலமான பின் தன் குருவிடம் சென்று, “எல்லாம் நாராயணன்தான், கடவுள் கைவிட மாட்டான் என்று கூறினீரே, எனக்கு ஏன் இப்படி ஆயிற்று? யானையில் இருந்த நாராயணன் ஏன் என்னைக் காப்பாற்றாமல் தண்டித்தார்?” என்று அழுகையுடனும் ஆத்திரத்துடனும் வினவினான்

அதற்கு குருநாதர், “அப்பா, யானையில் நாராயணன் இருந்தது உண்மைதான். ஆனால் அதற்கு முன் பாகன் நாராயணன் உன்னை ஒதுங்கச் சொல்லி எச்சரித்தானே, ஏன் நீஒதுங்கவில்லை?; அதனால் தான் இப்படி ஆனது” என்றார்.

சீடன் பதில் பேச முடியாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

”ஆகவே தீயவர்களிடம் விலகி இருத்தலே நல்லது” என்று சொல்லிக் கதையை முடித்தார் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

சீடர்களும் உண்மையை உணர்ந்தனர்.

Tuesday, August 4, 2015

பட்டினத்தார் பற்றிய சிறு கதை

ॐ விவேகானந்தன் ॐ - 13 de novembro de 2010 - denunciar abuso
விவேகானந்தன் என்பவர் ஆர்குட்டில் பகிர்ந்தகதை.


விமர்சிக்கும் உலகம் இது

பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. சோற்றாசை கூட இல்லாத சந்யாஸி. கையில் ஓடு வைத்திருந்த பத்திரிகிரியாரைத் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி. அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியது தெரியுமா?

நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.


அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலைவைத்துப் படுத்திருந்தார். ஒரு பெண்மணி, “யாரோ மகானா!” என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தார். மற்றொரு பெண்மணியோ, “ஆமாம்… ஆமாம்… இவரு பெரிய சாமியாராக்கும்… தலையணை வைச்சுத் தூங்கறான் பாரு… ஆசை பிடிச்சவன்” என்று கடுஞ்சொல் வீசினார். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், “ஆஹா… நமக்கு இந்த அறிவு இது நாள் வரை இல்லையே” என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.

சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, “பார்த்தாயா… நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரூ… இப்பவாவது ஒத்துக்கோ… இவரு மகான்தானே…! என்றார். அந்த பெண்மணியோ, தனக்கே உரித்த பாணியில் “அடி போடி… இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேட்கிறான்… அதைப் பத்திக் கவலைப்படறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?” என்று ஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது.

நீதி:

எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்!!!

Monday, August 3, 2015

புத்தர் கதை

ஒருமுறை, புத்தர் தன் ஆசிரமத்தைச் சுற்றி நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு சீடர் தனக்கு ஒரு புதுச் சால்வை வேண்டுமென்று அவரைக் கேட்டார்.

"பழைய சால்வை என்ன ஆயிற்று?" என்று புத்தர் வினவினார்.

சீடர் சொன்னார், "அது மிகவும் பழையதாகி விட்டதால் அதைப் படுக்கை விரிப்பாகப் பயன்படுத்துகிறேன்" என்று.

"அப்படியானால், பழைய படுக்கை விரிப்பு என்ன ஆயிற்று?" என்று கேட்டார் புத்தர்.

"அது பல இடங்களில் கிழிந்து விட்டதால், பிரித்துத் தைத்துத் தலையணை உறைகளாகப் பயன்படுத்துகிறேன்" என்றார் சீடர்.

"அது சரி, முன்பாகவே தலையணை உறைகள் இருந்திருக்குமே, அவை எல்லாம் என்ன ஆயின?"

"அவை மிகவும் தேய்ந்து விட்டன. ஆகவே இப்போது அவற்றை மிதியடியாகப் பயன்படுத்துகிறேன்."

"ஏற்கெனவே இருந்த மிதியடி என்னவாயிற்று?" என்றார் புத்தர் விடாமல்.

"அது மிகவும் தேய்ந்து, அதிலுள்ள நூல்கள் சிறு சிறு இழைகளாகவே வந்து விட்டன. அவற்றை விளக்குகளுக்குத் திரியாகப் பயன்படுத்துகிறேன் குருதேவா!" என்றார் சீடர் சலிப்படையாமல்.

புத்தர் புன்னகை புரிந்தார்.

நீதி:

இயற்கையில் இருந்து கிடைக்கும் எதையும் வீணாக்காதவனே இறைவனை அடைய முடியும்