Thursday, July 31, 2014

பஜகோவிந்தத்தின் வரலாறு

இந்த கதை மிகவும் அருமையான கதை. பக்தி மார்க்கத்தில் மனதை ஈடுபடுத்தும்


ஆதிசங்கரர் வட இந்தியாவில் ஒரு கிராமத்துக்கு போனார். அங்கே ஒரு வயதான மனிதன் சமஸ்கிருத இலக்கணம் படித்துக்கொண்டு இருந்தார். அதில் டுக்ருஞ்கரணே என்று மனப்பாடம் செய்து கொண்டு இருந்தார்.

அதைப்பார்த்து பரிதாபப்பட்ட ஆதிசங்கரர். பஜகோவிந்தம் பாடினார்.

அதன் முதல் பாடல் அர்த்தம்

கோவிந்தனைப்பாடு,கோவிந்தனைப்பாடு,கோவிந்தனைப்பாடு மூட மனமே
(கோவிந்தன் என்றால் சைவர்கள் என்ன செய்வார்கள். ஆதி சங்கரரின் குருவின் பெயர் கோவந்தர். குருவாகிய சிவனை வணங்குங்கள் என்று அர்த்தம் செய்து கொள்ளலாம்)
சாகும் தருவாயில் டுக்ருஞ்கரணே என்ற இலக்கணப்பாடம் வந்து காப்பாற்றாது என்று பாடினார்.

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் பக்தியே முக்திக்கு வழி. இலக்கண , இலக்கிய பாடங்கள் அறிவை வளர்க்க உதவி செய்யுமே தவிர பிறவிப்பெருங்கடல் தாண்ட உதவாது

கணாபத்யம்

கணாபத்யம்

ஓம் கம் கணபதயே நம என்னும் மந்திரத்தை சொல்லவேண்டும்.

விநாயகர் அகவல் என்ற இந்த அவ்வையார் இயற்றிய பாடலை பாராயணம் பண்ணவேண்டும்.

விநாயகரை வணங்கினால் காரியம் கைகூடும். தடைகள் அகலும். ஆன்மீகத்திலும் முன்னேறலாம்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசைப் பாடப்
பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகுஎ றிப்பப்
பேழை வயிறும், பொரும்பாரக் கோடும் 05

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த தூய மெய்ஞ்ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன 15

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்துஎன் உளம்தனில் புகுந்து 20

குருவடிவு ஆகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில் 25

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கு அருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்துஇருள் கடிந்து 30

தலமொரு நான்கும் தந்துஎனக்கு அருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்குச நிலையும் 35

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்து அறிவித்துக்
கடையிற் கழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முகம் ஆக இனிதெனக்கு அருளி 50

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதுஎனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து 55

முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிங்கு ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில் 60

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம்காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் 65

கணுமுற்றி நின்ற கரும்பு உள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடும்மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சு அக்கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத் 70

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே

Tuesday, July 29, 2014

வைணவம்

வைணவம்

ஓம் நமோ நாராயணாய

இது மதுரகவிஆழ்வார் என்னும் ஆழ்வாரினால் பாடப்பட்டது. அவர் தன் குருவான நம்மாழ்வாரை நினைத்து பாடினது. இவர் ஒரு ஆழ்வார் தான் திருமாலைப்பாடாமல் குருவை மட்டுமே பாடினவர்.

இதை 10000 தடவை சொன்னால் நம்மாழ்வார் நேரில் வருவதாக ஒரு நம்பிக்கை

மதுரகவிஆழ்வார் ஞானத்தை தேடி காசி வரை சென்றார். அங்கே ஒரு ஜொதி தெரிந்தது. அந்த ஜோதியை பின்பற்றி நடந்து சென்றார். அது அவரின் சொந்த ஊர் பக்கம் இருக்கும் ஆழ்வார்திருநகரி வரை வந்தது.
பின் ஒரு புளியமர பொந்தில் போய் மறந்தது. அந்த பொந்தில் நம்மாழ்வார் தவம் செய்து கொண்டு இருந்தார்

இதைப்பார்த்த மதுரகவி ஆழ்வார் , நம்மாழ்வாரை எழுப்ப சிறு சத்தம் எழுப்பினார். ஒரு கல்லை தூக்கி எறிந்தார் என்றும் சொல்லுவார்கள். நம்மாழ்வாரைப்பார்த்து

“செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்” என்று கேட்டார்

அதற்கு நம்மாழ்வார் “அத்தை தின்று அங்கே கிடக்கும்” என்று பதில் சொன்னார்.

அதற்கு அர்த்தம் என்னவென்றால் செத்ததாகிக இந்த அண்டத்தில் வயிற்றில் சிறியதாகி ஆன்மாக்கள் பிறந்தால் எதைத்தின்று எங்கே கிடக்கும் என்று அர்த்தம்.

பரம்பொருள் நாராயணனே என்று அறியாமல் இன்ப துன்பங்களை நுகர்ந்து பிறப்பு இறப்பில் அங்கேயெ கிடக்கும் என்று பதில் சொன்னார். அருமையான பதில்

நம்மாழ்வாரை பற்றி மதுரகவிஆழ்வார் எழுதின பாடல் இது

1. கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என் அப்பனில்
நண்ணித்தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே.

2.நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்றறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே.

3.திரிதந்தாகிலும் தேவபிரானுடை
கரியகோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண்குருகூர் நகர்நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே.

4.நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னையாண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே.

5.நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்
செம்பொன்மாடத் திருக்குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே.

6.இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன்புகழ் ஏத்த அருளினான்
குன்றமாடத் திருக்குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன் காண்மினே.

7.கண்டு கொண்டென்னை காரிமாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றியருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண்தமிழ் சடகோபன் அருளையே.

8.அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ்வுலகினல் மிக்கதே.

9.மிக்கவேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்கசீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆள்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே.

10.பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணிகொள்வான்
குயில் நின்றார்பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன்தன் மொய்கழற்கு அன்பையே.

11.அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெல்லாம்
அன்பன் தென்குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே.

இந்து மத சுருக்கம்

இறைவனை உள்ளுக்குள் உணர வேண்டி ஆதிசஙக்ரர் எளிமையாக சனாதன தர்மம் என்னும் இந்து மதத்தை 6 பிரிவுகளாக பிரித்தார்

சைவம்

”ஓம் நமச்சிவாய”

என்னும் மகா மந்திரத்தை (பஞ்சாட்சரம்) தினமும் எப்பொழுதெலாம் நேரம் கிடைக்கிறதோ அப்போவெலாம் சொல்லவேண்டும்

அப்படியே சிவபுராணம் என்னும் மாணிக்கவாசகர் இயற்றியதை சொல்லவேண்டும். மாணிக்கவாசகர் சொல்ல சிதம்பரம் நடராஜரே எழுதியது தான் திருவாசகம். அதன் முக்கியமான பகுதியே சிவபுராணம்

----------- வைணவர்கள்
ஓம் நமோ நாராயணாய
”கண்ணினுன் சிறுத்தாம்பு” என்னும் மதுரகவிஆழ்வார் , நம்மாழ்வாரைப்பற்றி பாடியதை சொல்லவேண்டும்

----------- கௌமாரம்
ஓம் சரவணபவ அல்லது ஓம் முருகா
அத்தோடு “கந்தர் அனுபூதி” சொல்லவேண்டும்

----------- சாக்தம்
”ஓம் சக்தி” என்னும் மகாமந்திரம்
கூடவே அபிராமி அந்தாதி சொல்லவேண்டும்

----------- கணாபத்யம்
ஓம் கம் கணபதயே நம
கூடவே “விநாயகர் அகவல்” சொல்லவேண்டும்

--------------- சௌரம் ------------
ஓம் பூர்புவஸ்ஸுவக
ஓம் தத்சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோந பிரச்சோதயாத்

இதற்கு அர்த்தம் என்னவென்றால் “என்னுள்ளே இருந்து அறிவைத்தூண்டும் சுடர்கடவுளாகிய சூரிய பகவானை தியானிப்போமாக” ------------------------------------------------------------------------
இதில் இருக்கும் 6 பிரிவுகளில் ஏதாவது ஒன்றை எடுத்து கொள்ளவேண்டும். அதற்கு வாழ்க்கையை அர்பனிக்கவேண்டும். தினமும் தியானித்து வந்தால் கண்டிப்பாக அத்வைத அனுபூதி கிடைக்கும் என்று மகான்கள் சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் எழுதினால் இடம் பத்தாது என்பதால் நாளை ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி விளக்கம் தருகிறேன். இது சுருக்கமனது மட்டுமே

Monday, July 28, 2014

மனீஷா பஞ்சக கதை


அத்வைத ஆச்சாரியாரான ஆதி சங்கரர் ஒரு தடவை காசியில் குளிக்க சென்றார்(சிஷ்யர்களோடு). அப்போழுது ஒரு புலையர் கையில் 4 நாய்களோடு எதிரில் வந்தார். ஆதிசங்கரரோ அவரை விலகிப்போ என்று சொன்னார்.

அதற்கு அவர் “உள்ள பொருள் ஒன்றே என்றால் யார் யாரிடமிருந்து விலகிப்போவது? ” விலகிப்போகவேண்டியது உடலா? மனமா? ஆன்மாவா?”

எங்கும் உள்ளது ஆத்மா என்றால் எப்படி விலகிப்போவது? என்று கேட்டார். இதனால் உண்மையை உணர்ந்த ஆதி சங்கரர் மனீஷாபஞ்சகம் என்ற துதிநூலை எழுதி அங்கேயே அந்த புலையரை துதித்தார்.

மனீஷா பஞ்சகம் என்ற நூல் அருமையான அத்வைத கருத்துகக்ள் அடங்கியது. அதன் தத்துவங்கள் நாளை பாக்கலாம்

Sunday, July 27, 2014

அத்வைதம்

சுருக்கமான கதை(எனக்கு சரியாக எழுத தெரியாத காரணத்தினால் எழுத்துப்பிழை, வாக்கியப்பிழையை பொறுக்கவேண்டும்)

நாம தேவர் என்ற மகான் வட இந்தியாவில் புகழ் பெற்றவர். அவர் சிறுவயதிலேயே விட்டோபா என்ற திருமாலின் கருணையைப்பெற்றவர். அதனால் பக்தியில் திளைத்தவர்.

அவர் ஒரு சத்சஙக்த்திற்கு போனார். அதில் கோராகும்பர் என்ற மகானும் இருந்தார். அவர் குயவர் இனத்தை சேர்ந்தவர். அவருக்கு ஒரு எண்ணம் வந்தது . குயவர் சட்டி தட்டும் கட்டையால் எல்லோர் தலையிலும் தட்டிப்பார்த்து சுட்ட சட்டி எது? சுடாத சட்டி எது? என்று பார்த்தார்.

அப்பொழுது நாம தேவர் தலையில் தட்டும்போது நாம தேவர் பொங்கி எழுந்தார். என் தலையில் தட்டி என்னை பரிசோதிக்க நீ யார் என்று இரைந்து பேசினார்.

இதைப்பார்த்த கோராகும்பர் இதோ ஒரு சுடாத மண்சட்டி என்று கிண்டல் செய்தார்.

அதனால் கோபப்பட்ட நாமதேவர் நேராக விட்டலனிடம்(விஷ்ணு) போனார். என்னைப்பார்த்து ஒரு குயவன் சுடாத பச்சை மண்சட்டி என்று சொல்லிவிட்டானே என்று கத்தினார். விட்டலனோ நீ உண்மையிலெயே சுடாத மண்சட்டிதான். அத்வைதம் என்ற தத்துவத்தை உணரவில்லை என்று பதில் சொன்னார்.

அந்த தத்துவத்தை நீயே விளக்கியருள் என்றூ நாமதேவர் கேட்டார். அதற்கு விட்டலனோ அதை விளக்க சத்குருவால் மட்டுமே முடியும் என்றூ சொல்லி அனுப்பினார். சத்குருவை நாமதேவர் தேடினார். விட்டலன் சத்குரு சிவன் கோயிலில் இருப்பதாக சொல்லி அனுப்பினார்.

அந்த சத்குருவை பார்க்க நாமதேவர் போனார். அவரோ வயோதிகர். வயதான காரணத்தினால் சிவலிங்கத்தின் மேல் கால் போட்டு படுத்திருந்தார்.

நாமதேவரால் இந்த அபசாரத்தை பொறுக்க முடியவில்லை. சத்குருவின் அபசாரத்தை நீக்கக்கருதி விளக்கமாக சொன்னார். அதற்கு சத்குருவான சிவனே பதில் சொன்னார். எங்கே சிவலிங்கம் இல்லையோ அங்கே என் காலை வை என்றார்.

நாமதேவர் காலை வேறோரிடம் எடுத்து வைத்தார். அங்கே புது சிவலிங்கம் உருவாகி காலைத்தாங்கி நின்றது. எங்கே காலை மாற்றி வைத்தாலும் சிவலிங்கம் உருவாகியது. நாமதேவர் குருவின் காலை எடுத்து தன் தலை மேல் வைத்தார். அதனால் நாமதேவரே சிவலிங்கமானார். குருவின் காலடி தீட்சையினால் மனம் பக்குவமானது.

நான் என்ற ஒன்று இல்லவே இல்லை. எங்கும் நிறைந்திருப்பவன் திருமால் என்ன்னும் விஷ்ணுவே என்ற உண்மையை உணர்ந்தார். சட்டி, சுட்ட சட்டி ஆனது.

அது முதல் நாமதேவர் கோவிலுக்கு போவதில்லை. ஒரு நாள் விஷ்ணுவே நேரில் தோன்றி “ஏதப்ப்பா என்னை அறவே மறந்துவிட்டாயே என்று கேட்டார். அதற்கு நாமதேவர் “பகவானே மறக்க நீயும் நானும் வேற. நீயும் நானும் ஒரே பொருள் இல்லையா?” என்று பதிலுக்கு கேட்டார். அப்பா சட்டி சுட்டசட்டி ஆகிவிட்டது என்று கூறி விஷ்ணு மறைந்தார்.

இந்தக்கதை வட இந்தியாவில் அத்வைத தத்துவத்தை உணர வைக்க ஆன்மீகவாதிகளால் சொல்லப்படுவது

நாமஜெபமே இறைவனை உணர்விக்கவல்லது(கலிகாலத்தில் மட்டும்). அதனால் நாம ஜெபம் செய்வோம். நான் என்ற ஒன்று இல்லவே இல்லை. எங்கும் நிறைந்திருப்பவன் இறைவன் மட்டுமெ என்ற உண்மையை உணர்வோம்.