Sunday, August 23, 2015

சிவராஜ யோக கதை

நெட்டில் சுட்ட கதை. எங்கே சுட்டேன் எனக்கு தெரியாது

சிகித்வஜன் என்பவனின் பட்டத்து ராணி சூடாலை.

உலக சுகங்களில் அதிகமாக ஈடுபாடு கொண்ட அவனுக்கு, இது உண்மையான சுகமில்லை. உண்மையான சுகத்தைத் தேடிப் பெற வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது.

அறிஞர்கள் பலரிடமும் அவன் விசாரித்தான். அவர்கள் அனைவரும் உண்மையான சுகம் ஆத்மஞானத்தில்தான் கிடைக்கும் என்றார்கள்.

அரசனும் அரசியும் ஆத்மஞானம் பெறுவது என முடிவு செய்தார்கள்.

ராணி சூடாலை மிகவும் புத்திசாலி. அவளுக்கு விரைவில் ஆத்மஞானம் கிடைத்தது. அவள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கலானாள். அவளுக்கு உலகம் இன்பமயமாகத் தோன்றத் தொடங்கியது.

சூடாலை அரசனுக்கு ஆத்மஞானம் பெறுவதி உதவ விரும்பியும் அதை அவன் ஏற்க மறுத்து விட்டான். அவனுக்குள், “ஒரு பெண்ணிடம் உபதேசம் பெறுவதா?” என்கிற எண்ணம் மேலோங்கியது.

அதன் பிறகு அவன் எவ்வளவு முயன்றும் ஆத்மஞானம் பெற முடியவில்லை. ஒருநாள் இரவு அவன் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினான்.

அந்தக் காலத்தில் சூடாலையே அரசனின் பணிகள் அனைத்தையும் கவனிக்கத் தொடங்கினாள். யோகப் பயிற்சி மூலம் பல திறன்களைப் பெற்றிருந்த அவள், அரசன் காட்டில் தனிமையில் உலவிக் கொண்டிருந்ததை அறிந்தாள்.

அவள் தனது சக்தியின் மூலம் தன்னை ஒரு இளைஞனாக மாற்றிக் கொண்டு காட்டிற்குள் சென்றாள். தனது பெயரை கும்பஜன் என்று மாற்றிக் கொண்டாள்.

சிகித்வஜனுக்கு கும்பஜனாக இருந்த சூடாலை ஆத்மஞானம் பெறுவதற்கான பல வழிகளைக் காட்டினாள்.

அவை அரசனுக்குப் பெரிதும் உதவின.அரசன், சிறிது சிறிதாக ஞான வழியில் முன்னேற்றமடைந்தான். முடிவில் அவனும் ஆத்மஞானம் பெற்று, மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கினான்.

சூடாலை அவனைச் சோதிப்பதற்காகத் தன்னை ஆணுருவத்திலிருந்து பெண்ணுருவத்துக்கு மாற்றிக் கொண்டு, மதனிகை என்ற பெயரோடு அவன் முன் தோன்றி, அவனை மணந்து கொண்டு அவனுடன் வாழத் தொடங்கினாள்.




ஒரு நாள் சூடாலை தன் யோகத் திறனினால் ஒரு இளைஞனைப் படைத்தாள். அன்று ஆற்றில் மாலை வழிபாடு முடித்துக் கொண்டு தன் இருப்பிடத்துக்குத் திரும்பிய அரசன், அங்கே மதனிகை ஒரு இளைஞனுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவனுக்குச் சிறிது கூட கோபம் வரவில்லை. மதனிகை அவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.

உடனே அவன், “இப்போது என்ன ஆகி விட்டது?, நாம் இப்போது நண்பர்களைப் போலத்தான் வாழ்கிறோமே தவிர, கணவன் - மனைவியைப் போலில்லை” என்று சொல்லித் தேற்றினான்.

அப்போது சூடாலை தன் உண்மையான உருவத்தில் அரசன் முன் தோன்றினாள். அவனுக்கு மகிழ்ச்சி உண்டானது.

இந்தக் கதையை வசிஷ்ட முனிவர், ஸ்ரீ ராமபிரானுக்குச் சொல்லி, “குழந்தையே நல்ல குலத்தில் தோன்றிய பெண்கள் தம் கணவரையும் சம்சார சாகரத்திலிருந்து கரையேற்றி விடுகிறார்கள்” என்றார்.

1 comment:

Ravichandran M said...

ஆத்ம ஞானம் பெற்றவன் கதை சிறப்பாக இருக்கிறது.